அம்மாவோட கையை பிடிச்சிக்கிட்டு நடந்துக்கிட்டிருக்கேன்.இன்னும் கொஞ்ச நேரம் லதா சித்தி வீட்ல இருந்திருந்தா முழுசா ஸீரியலை பார்த்திருக்கலாம். இந்த அம்மா தான் அப்பா வந்திடுவாங்கன்னு கெளம்பிட்டாங்க. நாளைக்கு ஸ்கூலுக்கு போய் தான் தெரிஞ்சுக்கனும்.அனு கண்டிப்பா பார்த்திருப்பா. அவங்க வீட்ல எல்லாரும் ஸீரியல் பார்ப்பாங்க.இந்த அம்மா தான் எதையும் பாக்கமாட்டாங்க,பாக்கவும் விட மாட்டாங்க.

“அப்பா எங்க போனீங்கன்னு கேட்டா என்ன சொல்லனும் மா?”

அம்மா என்னை குனிஞ்சு பார்த்து “பாஸ்கர் அண்ணா வீட்டுக்கு போனோம்னு சொல்லு கண்ணா?”

“ஏம்மா அப்பாவுக்கு லதா சித்தியை பிடிக்கலை”

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்.”

அம்மா எனக்கு புரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அப்பா கோபமாய் சித்தியை வீட்டைவிட்டு வெளியே போடி நாயேன்னு திட்டினாங்களே.அப்பத்ல இருந்து தான் சண்டை.

“அம்மா என்னை தூக்கிக்கிறியா?”

“ஏண்டா வயசு 6 ஆச்சு , இன்னும் ரெண்டு மாசத்துல செகண்ட் ஸ்டான்டர்ட் போயிடுவே,உன்னை தூக்கி இடுப்புல வெச்சுக்கிட்டா எல்லாரும் கேலி பண்ண மாட்டாங்க”

“இல்லமா ரொம்ப இருட்டா இருக்கு தெரு முனை கிட்ட …அங்க நிறைய நாய்ங்க இருக்கும்…..நான் அப்பாகூட ஸ்கூட்டர்ல ஸ்கூலுக்கு போகும் போதுக்கூட குரச்சிக்கிட்டே பின்னாடி ஒடி வருங்க…எல்லா நல்லா வெறி பிடிச்சதுங்க”

“இந்த கார்ப்ரேஷங்காரங்களை ஒதைக்கனும்….பாதி லைட் வேலை செய்யல….9:00 மணிக்கே இந்த ரோடு எவ்வளவு ஜிலோன்னு இருக்குது பாரு….சரி வா”

அம்மா என்னை தூக்கிகிட்டாங்க. குப்புன்னு அம்மாவோட பூ வாசனை அடிச்சது.மல்லிப்பூ.

இன்னும் கொஞ்ச தூரம்தான் . அந்த குப்பமேட்டுல தான் அதுங்க எல்லாம் படுத்திருக்கும். நாலஞ்சு இருக்கும். ஒன்னு நல்ல கருப்பு , ரெண்டு பிரவுன் கலர் இன்னொன்னு வெள்ளையும் பிரவுனும் கலந்தது. கருப்பு கலர் தான் ரொம்ப மோசம். அது உடம்பெல்லாம் ஒரே புண்ணா இருக்கும்.ஒரு வாட்டி அது அந்த பிரவுன் கலர் நாயோட சண்டை போட்டுக்கிட்டிருந்தது , அது முதுகு மேல ஏறி கீழ தள்ள பார்த்திச்சு….அத பார்த்த அந்த வெள்ளை நாயும் பிரவுன் நாயை அட்டாக் பண்ணிச்சு….பாவம்….அப்பா இதுங்கள வெறி பிடிச்ச நாய்ங்கன்னு திட்டுவாரு….கடவுளே இன்னைக்கு அந்த நாய்ங்க அங்க இருக்க கூடாது…..நானும் அம்மாவும் தனியா மாட்டிக்க கூடாது…..அம்மாவுக்கு கொஞ்சம் மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சு…நான் நல்லா வெயிட் போட்டுட்டேன்..

அட யாரோ மூணு பேர் பின்னால வராங்க….அப்பாடி நானும் அம்மாவும் தனியா போகல….அதுல சிகரெட் பிடிச்சிக்கிட்டுருக்கிறவர் என்ன பார்த்து கைய ஆட்டுறார்….நான் பதிலுக்கு சிரிச்சேன்.
இன்னொருத்தர் எதோ பாட்டு பாடுறார்..அவங்க எல்லாரும் எதோ பேசிக்கிட்டு சிரிச்சிக்கிறாங்க.அம்மா என்ன இறுக்கமா பிடிச்சுக்கிட்டு வேகமாய் நடக்க ஆரம்பிச்சிட்டாங்க..

சட்டுன்னு ஒரு நாய் குரச்சது..பார்த்தா அந்த கறுப்பு நாய்தான் ….இருட்ல அது கண்ணு பார்க்கிறதுக்குக்கே பயம்மா இருக்கு…ஐயோ எங்க பக்கம்தான் வருது…கடவுளே …நான் அம்மா கழுத்த கட்டிக்கிட்டேன்.

அம்மா ஒரமா ஒதுங்கி கட கடன்னு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க…அந்த ஆளுல்ல யாரோ ஓய் ஓய்ன்னு நாய மிரட்டிக்கிட்டு இருந்தாரு….நான் கண்ண தொறந்து பாக்கல…..எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டேன்…அப்பா இருந்திருந்தா ஸ்கூட்டர்ல சர்ன்னு போயிருக்கலாம்…எல்லாம் இந்த அம்மாவால தான்…அப்பாவுக்கு தெரியாம எதுக்கு லதா சித்தி வீட்டுக்கு வரணும்..

அம்மா திரும்புற மாதிரி தெரிஞ்சுது..கண்ண தொறந்தா..ஆமா தெருவை கடந்தாச்சு….மெயின் ரோடு தெரியுது….அப்பாடா….

அம்மாவை பாக்குரேன்…மூஞ்செல்லாம் வேர்த்து போயிடுச்சு….இன்னும் நாய்ங்க குலைக்கிற சத்தமும் அந்த ஆளுங்க அத அதட்டுற சத்தமும் கேக்குது.

அம்மா திரும்பி பார்த்துட்டு சொன்னாங்க “பொறுக்கி நாய்ங்க”

பாவம் அம்மாவும் பயந்துட்டாங்க போல….நான் அம்மாவோட தோளுல சாய்ஞ்சுக்கிட்டேன்..ஜில்லுன்னு இருந்தது…நானும் வாய்க்குள்ளயே முணுமுணுத்துக்கிட்டேன் ” பொறுக்கி நாய்ங்க”.

அம்மவோட வியர்வ என் வாய்ல லேசா உப்பு கரிச்சது.

Advertisements