வாரத்தைகளை குவித்து குவித்து
கோபுரம் கட்டி விளையாடிய
எனக்கு சட்டென்று
கடவுளர்கள் வசிக்கும் ஆகாசத்தை
எட்டி பிடிக்க ஆசை தட்டியது.

மல மலவென்ற கதியில்
மலை மலையென வார்த்தைகள்
குவியத் தொடங்கின
சீர் பிரித்து , நடை திருத்தி
கேள்விகளாக்கி நிதானமாகவே
முன் ஏறினேன் கனவோடு.

காற்று மண்டலம் கடந்து
நிலாவை கடந்து
கோள்களோடு தோளுரசி
உயர உயர எழும்பியது
வார்த்தை கோபுரம், இன்னும்
கொஞ்ச தூரம் தான் என்ற நம்பிக்கையோடு !

ஆனால் சட்டென்று
ஒரு புரியா கணத்தில்
வார்த்தை அருவி நின்றுவிட்டது.
மூளையின் மூலையெங்கும் தேடினேன்
எங்கும் வெறிச் , வெறிச்.
வார்த்தைகளற்ற நிலை…

காலுக்கடியில்
உயிருள்ள புழுக்களாய் உலகின்
அத்தனை வார்த்தைகளும்
தலைக்கு மேல்
நட்சத்திர மினுங்கலோடு
கருத்த முடிவின்மையின் மோன புன்னகை.

என் இதழிலும் ஒரு
மந்தகாச புன்னகை விரிந்தது
நான் மௌனம் ஆகிவிட்டேன்.

Advertisements