நான் இந்த கதையை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் வீட்டில் நடந்த சம்பவங்கள் என்னை எழுத தூண்டி தள்ளியது. இதை படிக்கும் மூளை கொழுத்த யாராவது இந்த கதையின் அர்த்தத்தையோ , அபத்தத்தையோ விளக்கிட மாட்டார்களா என்ற நப்பாசையும் உண்டு. தலைப்பிடும் போது ரத்தத்தை எப்படி எழுதுவது என்று ஒரே குழப்பம் – ரத்தமா ? இரத்தமா ? கடைசியில் ரத்தம் ரத்தமாகவே இருக்கட்டும் இரத்தமாக வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த கதையை எங்கள் வீட்டு கடிகாரத்திடம் இருந்துதான் தொடங்கவேண்டும்.கதா நாயகன் , வில்லன் இரண்டும் அதுதான் இந்த கதைக்கு. நூறு வருடத்திற்கு முந்தைய தாத்தா காலத்து பென்டூலக் கடிகாரம் அது. யாரோ ஒரு வெள்ளைக்காரனிடம் இருந்து என் தாத்தா வாங்கியது.மஹொகனி மரத்தில் நல்ல வேலைப்பாட்டோடு ஏழடி உயரத்தில் ஆஜானுபா குவாக அமர்ந்திருக்கும் என் வீட்டு முன்னறையில்.வீட்டிற்கு வரும் யாரும் பார்க்க தவறாதபடி.இந்த கடிகாரத்தை குறித்து எனக்கு சின்ன வயதிலிருந்தே ஏக பெருமை.

ஒரு நாள் நான் அலுவல் முடிந்து வீட்டிற்குள் நுழைந்தேன். என் காலடி சத்தம் கேட்டு , சமயலறையில் இருந்து வெளிவந்த என் மனைவி பொரிய ஆரம்பித்துவிட்டாள் , வழக்கம்போல. ஆனால் இன்று அவள் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு தூக்கிவாரி போட்டது.

“என்னங்க இந்த கடிகாரத்தில ஏதோ இருக்குங்க . இது எப்பல்லாம் நின்னுடுதோ அப்பல்லாம் வீட்ல ஒருத்தர்க்கு ரத்த காயம் ஏற்படுது. இன்னைக்கு காலையில 11 மணிக்கு நின்னுடுச்சு.எனக்கு பாத்ரும்ல இரும்பு வாளியில துரு கிழிச்சு கையெல்லாம் ரத்தம்.”

பரபரப்பாய் அதே சமயம் தெள்ளத்தெளிவாய் பேசிக்கொண்டே போனாள்.

“போன தடவை நின்னு போய் கீ கொடுத்தோமே அப்பதான் சின்னவன் படிக்கட்டுல விழுந்து உதடு கிழிஞ்சது. அதுக்கு போன தடவை பென்சில் சீவும் போது உங்களுக்கு ரத்தம். அப்புறம் பெரியவனுக்கு சைக்கிள்ல அடிபட்டது , எனக்கு காய்கறி நறுக்கும் போது கை அறுத்தது – இப்படி எல்லாமே இந்த கடிகாரம் நின்ன போது நடந்தது தாங்க. நானும் மூனு மாசமா நோட் பண்றேன். பேசாம இந்த கடிகாரத்தை தூக்கி போட்டுடலாங்க. இல்லன்னா ஒரு பூசாரியை கூப்பிட்டு திருஷ்டி பூஜை செஞ்சிடலாம் ”

எனக்கு கோபம் , ஆச்சரியம் , பயம் ,சிரிப்பு என்று பாகுபாடில்லாமல் எல்லா உணர்வுகளும் கலந்து மோதியது. பொதுவாக பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம். அதிலும் என் மனைவிக்கு கொஞ்சம் தூக்கல். சின்ன சின்னதாய் நடக்கும் விஷயங்களுக்கு கூட அவளே புது புது அர்த்தம் கற்பித்து கொண்டு மனசை குழப்பிக்கொள்வாள். நான் அவளை கையமர்த்தி அழுத்தமாக சொன்னேன்.

“பித்துகுளியாட்டம் பேசாதே. நீ சொல்ற எதுவும் எனக்கு அர்த்தமாகல.தற்செயலா நடக்கற விஷயத்திற்கு அனாவசியமா முடிச்சு போட்டு மனசை குழப்பிக்கிட்டு மத்தவங்க மனசையும் குழப்புற. கடிகாரத்த தூக்கி போடுன்டோ திருஷ்டி பூசை பண்ணுன்டோ எங்கிட்ட இனிமேல் உளறாதே. போ போய் ஒரு காஃபி கொண்டா. ”

சுண்டி போன முகத்தோடு , ஏதோ முணுமுணுத்தபடி சென்றுவிட்டாள். இத்தோடு இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு நான் டிவியில ஃபுட்பால் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன். பிள்ளைகளும் மனைவியும் உள்ளறையில் தூங்கி கொண்டிருந்தார்கள். இப்படி வார இறுதியில் இரவெல்லாம் டிவி பார்த்துக்கொண்டு விஸ்கி சாப்பிடுவது என் வழக்கம். நான் சோஃபாவில் ஒருக்களித்து படுத்திருந்தேன்.ஏதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு சட்டென்று கடிகாரத்தை பார்த்தேன்.அது நின்று விட்டிருந்தது. 3:40. அதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே சொலீர் என்ற சத்தத்துடன் டீபாயின் மேலிருந்த கண்ணாடி டம்ப்ளர் கீழே விழுந்து உடைந்தது. தெறித்த ஒரு கண்ணாடி சில் என் கனுக்காலை குத்த , குபுக்கென்று கருஞ்சிவப்பாய் ஒரு சொட்டு ரத்தம் எட்டி பார்த்தது.எனக்குள் ஒரு பயப்பருந்து சிறகடிக்க ஆரம்பித்தது. முடிவிலிக்குறியை போல வயிறு பின்னிக்கொண்டது.சத்தம் கேட்டு வந்த என் மனைவி , கண நேரத்தில் நடந்ததை கிரகித்துக்கொண்டாள்.

“நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா ? பைத்தியக்காரி அது இதுன்னு சொல்லி வாயை அடைச்சிட்டீங்க. நான் யார் என்ன சொன்னாலும் நாளைக்கு அந்த சாமியாரை கூட்டிட்டு வந்து பூஜை பண்ணத்தான் போறேன். தள்ளுங்க . பெருக்கி அள்ளனும். போய் காயத்துக்கு மருந்து போட்டுக்குங்க…” அவள் பேசிக்கொண்டே போனாள்.

வாயடைத்து நின்ன நான் எதுவும் சொல்லாமல் என் படிக்கும் அறைக்குள் நுழைந்தேன். என்னால் அதிர்ச்சியிலிருந்தும் , குழப்பத்திலிருந்தும் வெளி வர முடியவில்லை. இது எப்படி நடந்தது என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தேன். என் காலோ கையோ பட்டு விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. சோஃபாவிற்கும் டீபாயுக்கும் மூன்றடி தூரம். நான் டம்ப்ளரை ஓரமா வைத்ததாக ஞாபகம் இல்லை.அப்படியே வைத்திருந்தாலும் நான் கடைசி பெக் போட்டது ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னால். வைத்தவுடன் விழாமல் அரைமணி கழித்து சொல்லி வைத்தாற் போல் கடிகாரம் நின்றவுடன் விழுந்தது தற்செயல் என்று மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.எனக்கு லேசாய் வியர்க்க ஆரம்பித்தது. என் மூளை தர்க்கபூர்வமாய் வெவ்வேறு தியரிகளை உருவாக்கிய வண்ணம் இருந்தது.ஆனால் கடைசியில் எல்லாம் விதண்டமாக முடிந்தது. நடந்த விஷயத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கும் ஒரு தெளிவை எட்ட முடியவில்லை.நடந்ததை தற்செயல் என்று ஒதுக்கவும் முடிய வில்லை. அமானுஷ்யம் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. என் அறிவிற்கு சவாலாய் மாறிவிட்டது.

கிடைத்த சவாலை மென்றபடி மூளை ஒரு கொதி நிலைக்கு சென்றுக்கொண்டிருந்தது.

சாதரணமான இரண்டு தற்செயல்கள் ஒரு காலப்புள்ளியில் ஒருமிப்பதால் ஏற்படும் பிரமிப்பே தர்க்க அறிவிற்கு அப்பாற்பட்டதாய் மாறிவிடும் போது , இத்தனை நாள்- பிரபஞ்சம்,பூமி ,உயிர் , மனிதன்- எல்லாமே கோடானுக்கோடி தற்செயல்களின் குவிப்புதான் என்று சாதரணமாய் நம்பியது எப்படி ? முழுமுற்றான பார்வையில்லாத அறிவியல் நம்பிக்கைகூட கண்மூடித்தனம் தான் இல்லையா – என் மனைவியின் கடவுள் நம்பிக்கை போல் ?ஆனால் ஒரு சராசரி மனிதனால் எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ள முடியுமா ? அப்படி புரிந்துகொள்வது அவசியம் தானா ?ஏதோ ஒரு நம்பிக்கையில் சந்தோஷமாயிருப்பது தான் மனிதனுக்கு வாய்த்ததா ? அய்யோ ! Am I a hypocrite ? An intellectual hypocrite ? அறிவாளி என்ற அடையாளத்திற்காக அறிவியல் நம்பிக்கையை சுமந்துக்கொண்டிருக்கிறேனா ?

அயர்ச்சியுடன் கண்களை மூடிக்கொண்டேன்.

நின்றுக்கொண்டிருந்த தளம் விலகி காற்றில் மிதப்பது போல் உணர்ந்தேன். என் வீட்டு கடிகாரம் அந்தரத்தில் பறந்துக்கொண்டிருந்தது .நிர்வாணமாய்.மூன்று பற்சக்கரங்கள் ( Gears) சுற்றிக்கொண்டிருந்தன உராய்ந்தபடி. ஆனால் பென்டூலத்திற்கு பதிலாய் ஒரு கரு நாகம் தன் வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அது மெல்ல தன் தலையை உயர்த்தி படம் எடுத்தது. இரண்டு உள்ளங்கை அகலத்திற்கு இருந்தது அதன் தலை. மஞ்சள் நிறத்து கண்கள் என்னை வெறிப்பது போல் தோன்றியது. நல்ல சிவப்பாய் அதன் பிளவுண்ட நாக்கு நொடிக்கொரு தரம் வெளிப்பட்டது. என்னை பார்த்துகொண்டே அந்த நாகம் தன் வாலை தானே விழுங்க ஆரம்பித்தது. எனக்குள் இனம் புரியாத கலவரம். அதன் வால் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட என் கழுத்து நெறிப்பதை போல் உணர்ந்தேன். சட்டென்று கண்களை திறந்துவிட்டேன். கனவா ? ஆனால் நிஜம் போல் இருந்தது. தொண்டை வறண்டு விட்டது.

ஃப்ரீட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து விழுங்கினேன். கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது. தன்னிச்சையாய் கண்கள் கடிகாரத்தை ஏறிட்டது . 3:40 இல் உறைந்த கடிகாரம் என்னை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது.

என் மனைவி சொன்னது போல் அடுத்த நாள் ஒரு பூசாரியை கூட்டி வந்து ஏதேதோ செய்தாள். அதற்கு பிறகு நான் கடிகாரத்திற்கு கீ கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அத்தோடு நிற்காமல் அன்டிக் கடிகாரங்களை வாங்கி கொள்ளும் கடைகளை தேடிக்க்கொண்டிருக்கிறேன். தெரிந்தால் தெரிவிக்கவும்.

Advertisements