குளித்து தலைதுவட்டி கண்ணாடி முன் நிற்க
எதிர்பட்டது நான் அறியா பிம்பம்.
யார் நீ என்று நான் கேட்க நினைக்க
முந்திக் கேட்டது அது

யார் நீ ?

தயக்கமில்லாமல் சொன்னேன்
‘ஐ அம் ஜெ.பி’ . அது சிரித்துக்கொண்டே
‘இப்பொழுது ஜெ.பி ஆக இருக்கும் நீ
நேற்று யாராக இருந்தாய் ?’ என்றது

ஒரு கணம் அதிர்ந்து பின் சுதாரித்து
‘ஐ வாஸ் ஜெ.பி தென் டூ’ என்றேன்.
அதிகம் சிரித்து கேலியாய் கேட்டது
‘நாளை யாராக இருக்க உத்தேசம்?’

வெட்கமும் குழப்பமும் முடிச்சிட
யோசித்துக்கொண்டே
‘ஐ வில் பி ஜெ.பி டுமாரோ டூ’ என்று முனங்கினேன்
அடுத்து என்ன கேட்கும் என்ற பயத்துடன்

நான் பயந்தபடியே கேட்டது
‘எப்பொழுதும் ஜெ.பி யாக இருக்க
அலுக்க வில்லையா உனக்கு ? ‘
கேட்டுவிட்டு மறைந்தும் விட்டது.

தனியாக விடப்பட்ட நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நாளை எதிர்பட்டால் என்ன பதில் கூறுவது.
ஆனால், நாளை அது அதுவாக இருக்குமோ
வேறாக இருக்குமோ ?

Advertisements