ஒரு தவளையின் மரணம்

பின்னூட்டமொன்றை இடுக

ஏப்ரல் கவிஞர்களின் மாதமாம். என் வீட்டின் அருகில் உள்ள ஒரு பழைய புத்தக கடையில் ஒட்டியிருந்த விளம்பரம் சொல்லியது. கடைவாசலில் ஒரு சிறிய டப்பாவில் அச்சடிக்கப்பட்ட கவிதை துண்டுகள் , யார் வேண்டுமானாலும் பொறுக்கிக் கொள்வதற்கு தோதாய் வைக்கப்பட்டிருந்தது. நான் பொறுக்கியது Richard Wilbur எழுதிய The Death of a Toad .படித்தவுடன் கவிதை பிடித்துவிட்டது.கூடவே தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆசையும்.தட்டுத்தடுமாறி ஒரு வழியாக பெயர்த்திருக்கிறேன் , கவிதையை.

ஒரு தவளையின் மரணம்

மின்சார புல்வெட்டியின் சக்கரங்களில்
சிக்கிய ஒரு தவளை
நசுங்கி கால் இழந்து
தத்தித் தாவி தோட்டத்தின் ஒரத்தில்
சினரேரியா இலைகளின் இதய
வடிவ நிழலுக்கடியில் ஒரு
இருள் படர்ந்த ஸ்தலத்தில்
அடைக்கலம் புகுந்தான்.

அந்த அரிய நிஜ ரத்தம் ஓடியது,
பூமியின் மேற்பரப்பில் , மடிப்புகளில்
சுருக்கங்களில் தங்கி ஓடியது.
முறைக்கும் கண்களின்
வடிகால்களில் பாய்ந்து ஓடியது.
அவன் விழுந்து கிடக்கிறான்,
கல்லாய் சமைபவனைப் போல்
சத்தமில்லாமல் கவனித்துக்கொண்டு , மரணித்துக்கொண்டு –

ஏதோ ஒரு ஆழ்ந்த சலிப்பூட்டும் ஓற்றைக்குரலை,
ஒரு பனி படர்ந்து ஒளிரும் கடலை அதன் கரையை ,
இழந்த தன் நீர் நில சாம்ராஜ்யத்தை .
நாள் கரைகிறது.அமிழ்கிறது.நீண்டு
முடிகிறது.அந்த விரிந்தஆதி விழிகளின்
பார்வை மட்டும் மலட்டு புல்தரையை தடவிச்செல்லும்
கடைசி கிரணங்களின் வழித்தடங்களை பார்த்துக்கொண்டு
நிலைத்திருக்கிறது.

Original

A toad the power mower caught,
Chewed and clipped of a leg, with a hobbling hop has got
To the garden verge, and sanctuaried him
Under the cineraria leaves, in the shade
Of the ashen and heartshaped leaves, in a dim,
Low, and a final glade.

The rare original heartsbleed goes,
Spends in the earthen hide, in the folds and wizenings, flows
In the gutters of the banked and staring eyes. He lies
As still as if he would return to stone,
And soundlessly attending, dies
Toward some deep monotone,

Toward misted and ebullient seas
And cooling shores, toward lost Amphibia’s emperies.
Day dwindles, drowning and at length is gone
In the wide and antique eyes, which still appear
To watch, across the castrate lawn,
The haggard daylight steer.

Advertisements

அறைகள்

பின்னூட்டமொன்றை இடுக

அறையெல்லாம் புத்தகங்கள்
புத்தகமெல்லாம் அறைகள்
திறந்து செல்ல கதவுகளும் இல்லை
உடைத்தெரிய சுவர்களும் இல்லை
இருந்தும்
அடைப்பட்டிருக்கிறேன் அறைகளுக்குள்.

அணையா தீ

பின்னூட்டமொன்றை இடுக

அவன்
தீயிட்ட அவனது
கடந்த காலம்
திகு திகுவென எரிந்தது.

செந்தீயின்
ஜுவாலைகள்
முகத்தில் ஆட
அதன் வெப்பம் இதம்.

சுவடின்றி
எரிந்தழியப்போகும்
தன் கடந்தகாலத்தை
கண்டு மனம் எக்களித்தது.

ஆனால்
தீ
அணையவில்லை
அணையவேயில்லை!

இருந்துக் கொண்டிருந்த கடந்தகாலத்திற்கு
பதிலாய்
எரிந்துக் கொண்டிருக்கும் கடந்தகாலம்
சாசுவதமானது,

அவன் வாழ்க்கையில்.

யார் நீ ?

2 பின்னூட்டங்கள்

குளித்து தலைதுவட்டி கண்ணாடி முன் நிற்க
எதிர்பட்டது நான் அறியா பிம்பம்.
யார் நீ என்று நான் கேட்க நினைக்க
முந்திக் கேட்டது அது

யார் நீ ?

தயக்கமில்லாமல் சொன்னேன்
‘ஐ அம் ஜெ.பி’ . அது சிரித்துக்கொண்டே
‘இப்பொழுது ஜெ.பி ஆக இருக்கும் நீ
நேற்று யாராக இருந்தாய் ?’ என்றது

ஒரு கணம் அதிர்ந்து பின் சுதாரித்து
‘ஐ வாஸ் ஜெ.பி தென் டூ’ என்றேன்.
அதிகம் சிரித்து கேலியாய் கேட்டது
‘நாளை யாராக இருக்க உத்தேசம்?’

வெட்கமும் குழப்பமும் முடிச்சிட
யோசித்துக்கொண்டே
‘ஐ வில் பி ஜெ.பி டுமாரோ டூ’ என்று முனங்கினேன்
அடுத்து என்ன கேட்கும் என்ற பயத்துடன்

நான் பயந்தபடியே கேட்டது
‘எப்பொழுதும் ஜெ.பி யாக இருக்க
அலுக்க வில்லையா உனக்கு ? ‘
கேட்டுவிட்டு மறைந்தும் விட்டது.

தனியாக விடப்பட்ட நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நாளை எதிர்பட்டால் என்ன பதில் கூறுவது.
ஆனால், நாளை அது அதுவாக இருக்குமோ
வேறாக இருக்குமோ ?

அஹம்பிரம்மாஸ்மி

பின்னூட்டமொன்றை இடுக

ஒரே ஒரு
வார்த்தை எழுதி
நான் எறிந்த கல்
மௌனமாய் அமிழ்ந்தது
கடலில்.

அது தரை தட்டும் முன்னே
கரை நிற்கும் என் மேல்
துப்பப்பட்டன
ஆயிரம் எரியா கற்கள்.

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு
அர்த்த புஷ்டியுடன்

மண்டை கிழிந்து
பிரக்ஞை இழந்து
சரிந்து விழுந்தேன்.
என் குருதி புனல்
கடல் சேர்ந்தது

கடல் அப்படியே இருந்தது;

நான் எறிந்த கல் அப்படியே இருந்தது;

நான் மட்டும் இல்லாமல் ஆனேன்.

!?

பின்னூட்டமொன்றை இடுக

முடிவுக்கு
பின்
முடிவின்மையை
உணரலாம் !
முடிவுக்கு
முன்
எதை
உணரலாம்?

ஆக்கமும் அழித்தலும்

6 பின்னூட்டங்கள்

வழி(லி)ந்து விழுந்த வெளிச்சம்
நனைத்தது அறையின் சுவர்களை.
சதுரம்.செவ்வகம்.சரிவகம்.
மாறி மாறி உருவம் செய்த்தது
வெயில்.
பின்பு சட் டென்று மெலிந்து மங்கி
விலகியோடியது யாரும் சொல்லாமலே.
உருவமிழந்த அறையில்
இறைக்கப்பட்ட பொருட்கள் மட்டும்.

மறுபடியும் நிகழ்ந்தது
உரு-ஆக்கமும்
உரு-அழித்தலும்.

ஒளி-வெயில்-தகிப்பு;
இருள்-நிழல்-குளிர்;

என் அறையில்
என்னைக் கேட்காமல்
எரிந்தணைந்து
விளையாடிக் கொண்டிருந்த
மத்தியான சூரியன் மேல்
கோபம் கோபமாக வந்தது.
ஜன்னலை சாத்திவிட்டேன்.

Older Entries